உள்ளக, வெளியக அரசியல் பரிமாணங்களைச் சரிவரப் புரிந்து கொண்டவர் தேசியத் தலைவர்! ருத்ரகுமாரன்

NEW YORK, UNITED STATES OF AMERICA, November 26, 2020 /EINPresswire.com/ --

தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வராது வந்த மாமணியாக ஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையின் குறியீடாகத் தமிழீழ மண்ணில் வந்துதித்து 26 நவம்பர் 2020 இல் 66 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தேசியத்தலைவரின் பிறந்தநாளையொட்டி அவரின் அரசியல் பரிமாணத்தை வெளிப்படுத்தும் வகையில் இச் சிறு குறிப்பினை எழுதுகிறேன்.

தேசியத்தலைவரதும் விடுதலைப்புலிகள் அமைப்பினதும் இராணுவ சாதனைகளைப் புகழ்ந்துரைக்கும் ஒரு பகுதியினர் அவரது அரசியல் பரிமாணத்தைப் பற்றிப் போதியளவு புரிதல் இல்லாது கருத்துரைப்பதைப் பலர் அவதானித்திருக்க முடியும். எனது அவதானிப்பின்படி தமிழீழம் இதுநாள் வரை கண்ட அரசியல் தலைவர்களில் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களே உள்ளக, வெளியக அரசியல் பரிமாணங்களைச் சரிவரப் புரிந்து கொண்டு செயற்பட்டவராவர்.

தேசியத் தலைவர் அவர்கள் சிறிலங்கா அரசின் தன்மையினையும் சிங்கள இனவாதத்தின் போக்கினையும் சரிவரப் புரிந்து கொண்டிருந்தார். ஏனைய தமிழ் அரசியல் தலைவர்கள் போன்று இலவு காத்த கிளி போல சிங்களத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தவர் அல்லர் தேசியத் தலைவர். சிங்கள இனவாதப் பூதம் என சிங்கள இனவாதத்தை வர்ணித்து இவ் இனவாதப் பூதம் தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமைகளையும் வழங்கப் போவதில்லை என்பதனைத் தெளிவாகவே உய்த்துணர்ந்து கொண்டு செயற்பட்டவர்.

தமிழ் மக்கள் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் சமத்துவத்துடனும் இனஅழிப்புக்கு உள்ளாகாமலும் வாழ வேண்டுமானால் சுதந்திரமும் இறைமையும் கொண்ட சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதுதான் ஒரேவழி என முரசறைந்தவர். தமிழீழ விடுதலைக்கான பேரியக்கத்தை வழிநடாத்திச் செயற்பட்டவர். இந்தப் புரிதலும் செயலும் அவரது அரசியல் பரிமாணத்துக்கு மிகத் தெளிவானதொரு எடுத்துக்காட்டாகும்.

தேசியத் தலைவர் அவர்கள் அனைத்துலக அரசியல் பரிமாணத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். உலக அரசியல் ஒழுங்கு அறத்தின் அடிப்படையில் இயங்குவதல்ல என்பதனையும், அது நலன்களின் அடிப்படையிலேயே இயங்குகிறது என்பதனையும் எடுத்தியம்பி, உலக அரசியல் ஒழுங்கில் ஈழத் தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகக் கருதப்படுவதற்குத் தமிழர் தேசம் தனது பலத்தை உச்ச அளவில் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதனையும் செயற்பாட்டு நடைமுறையாகக் கொண்டிருந்தார்.

அனைத்துலக அரசுகள் இலங்கைத்தீவில் நடப்பவை அனைத்தையும் நன்கு அறிந்து வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதனையும், பல சமயங்களில் தமது நலன்களுக்கேற்ப உண்மை தெரியாது நித்திரை போல நடிக்கின்றன என்ற புரிதலும் தேசியத் தலைவருக்கு இருந்தது. ஒரு சமயம் வெளிநாட்டில் இருந்து சென்ற ஆதரவாளர் ஒருவர் தேசியத் தலைவரிடம் ‘இங்கு நடப்பவை எவையும் வெளிநாட்டு அரசுகளுக்குத் தெரிய வருவதில்லை’ எனக் கூறியபோது «அப்ப அவையளுக்கு சூப்பி வாங்கிக் கொடுங்கோ» எனத் தேசியத் தலைவர் சிரித்துக் கொண்டு கூறினாராம்.

தேசியத் தலைவர் எதிர் கொண்ட பிரச்சினை ஈழத் தமிழ் மக்களின் நலன்களையும் அனைத்துலக அரசுகளின் நலன்களையும் எவ்வாறு ஒரே கோட்டில் இணைய வைப்பது என்பதே. ஈழத் தமிழ் மக்கள் உலக அரசியற் சமன்பாட்டில் ஒரு தரப்பாகக் கருதப்படும் நிலை தோற்றம் பெற்றால்தான் அதன் பின்னர் தமிழ் மக்களின் நலன்களையும் உலக அரசுகளின் நலன்களையும் இணைய வைக்க முயல முடியும் என்பதனை தேசியத் தலைவர் அவர்கள் உய்த்துணர்ந்து கொண்டார்.

அனைத்துலக அரசியலில் ஒரு பொருட்டாக, ஒரு தரப்பாகக் கருதப்பட்டிருக்காத ஈழத் தமிழர் தேசத்தை தேசியத் தலைவர் அவர்கள் ஒரு தரப்பாக நிலை நிறுத்தினார். தமிழீழ தேசத்துக்கான நடைமுறையரசினை நிறுவி தென்னாசியாவின் புவிசார் அரசியல் சமன்பாட்டில் தமிழீழத்தையும் தவிர்க்கமுடியாத தரப்பாக எழுச்சி காண வைத்தார். அரசுகளை மையப்படுத்திய உலக ஒழுங்கில் அரசில்லாத ஒரு தேசம் இவ்வளவு தூரம் முன்னேற முடிந்தது என்பதே ஒரு சாதனைதான்.

தேசியத் தலைவரால் நிறுவப்பட்ட தமிழீழ நடைமுறையரசு சமூகநீதி நிலவுகின்ற அரசாக, இயற்கையோடு ஒத்திசையும் அரசாக அமைந்தது. சாதி வேறுபாடுகள் சமூக சமத்துவத்தைத் தீண்ட முடியாத நிலையும், பெண் சமத்துவம் போற்றப்படும் ஒழுங்கும் தமிழீழ நடைமுறையரசில் நிலவின. சுகாதாரம், சூழல்பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி, உட்கட்டமைப்பு போன்றவற்றில் கூடிய கவனத்தைத் தமிழீழ நடைமுறையரசு செலுத்தி வந்தது.

தமிழ் மக்களின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில், உயர்ந்த அரசியல் இலட்சியங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ நடைமுறையரசு அமைக்கப்பட்டிருந்தமை தேசியத் தலைவர் அவர்களது அரசியற் பரிமாணத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக அமைந்தது.

தேசியத் தலைவர்கள் அவர்கள் இறுதி இலட்சியத்தில் மிக உறுதியாக இருந்தவர். ‘போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் இலட்சியம் மாறாது’ என உறுதியாக எடுத்துரைத்தவர்;. அதனை நடைமுறையிலும் செயற்படுத்திக் காட்டியவர். சவால்களை எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளுடன் எதிர் கொண்டவர். சிறிய தமிழீழ தேசத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தியவர். தமிழ் மக்களின் எழுச்சியின் வடிவமாக என்றும் தமிழ் மக்களின் மனதில் அவர் நிலைத்திருப்பார்.

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
email us here
Visit us on social media:
Facebook
Twitter

Data & News supplied by www.cloudquote.io
Stock quotes supplied by Barchart
Quotes delayed at least 20 minutes.
By accessing this page, you agree to the following
Privacy Policy and Terms and Conditions.